மாவட்ட செய்திகள்

கைவிலங்கை துண்டித்து தப்பிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சிக்கினார்

ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் கைதுசெய்த போது போலீசாரை கைவிலங்கை துண்டித்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் கைதுசெய்த போது போலீசாரை கைவிலங்கை துண்டித்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கைவிலங்கை துண்டித்து தப்பினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவியாக இருப்பவர் சுவிதா. இவரது கணவர் கணேஷ் (வயது 43). இவர் மீது கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரை விசாரிக்க குனியமுத்தூர் போலீசார் சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு வந்தனர். எல்.மாங்குப்பம் பகுதியில் இருந்த கணேஷை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து கைகளில் விலங்கு மாட்டி போலீஸ் வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றனர்.

அப்போது கணேஷின் ஆதரவாளர்கள் குனியமுத்தூர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கணேஷ் கையை ஒரு போலீஸ்காரர் கையுடன் இணைத்து மாட்டப்பட்டிருந்த கைவிலங்கை அகற்றுவதற்காக இருவரையும் அருகிலிருந்த வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றி துண்டித்து விட்டு ஆதரவாளர்கள் கணேஷை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

இந்த சம்பவத்தின்போது குனியமுத்தூர் போலீசார் 2 பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் உமராபாத் போலீசில் அளித்த புகாரின் பேரில் கணேஷ், அவரது மனைவியான துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதா உள்ளிட்ட 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில் வெல்டிங் கடை உரிமையாளர் உள்பட 9 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்து இருந்தனர். தலைமறைவாக இருந்த கணேஷ் உள்ளிட்ட மற்றவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேஷை நேற்று முன்தினம் நள்ளிரவு அரங்கல்துருகம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவி சுவிதா உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.