புதுக்கோட்டை,
கொலை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கருப்பையா. இவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அந்த பணி தனக்கு கிடைப்பதற்காக அவரது மகன் பழனி என்கிற பழனிச்சாமி (வயது 35), தனது நண்பர் ஆனந்தன் (48)வுடன் சேர்ந்து கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களிடம் அதற்கான நகலில் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்குள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. போக்சோ, கொலை உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.