பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே கீழக்கரை பகுதியில் எல்லையம்மன் கோவிலை ஒட்டியவாறே ஊராட்சியின் கட்டுப்பாட்டில் அம்சா ஏரி இருக்கிறது. இந்த ஏரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் மண் மூடி தூர்ந்து போய் இருந்தது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட செடிகளும் இந்த ஏரியை ஆக்கிரமித்துவிட்டன. தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி அம்சா ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினால் நீரை சேமிக்க முடியும். இதனால் அப்பகுதியிலுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது. மேலும் அம்சா ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி நீண்ட நாட்களாக பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்த 8-வது மாநில மாநாட்டில், சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒரு ஏரியை தூர்வார வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஆழப்படுத்தும் பணி தொடங்கியது
அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அம்சா ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மண்வெட்டி, கடப்பாறை உள்ளிட்டவற்றின் மூலம் ஏரி மண்ணை தோண்டி எடுத்து ஆழப்படுத்தும் பணியில் சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் மாவட்ட தலைவர் மரியதாஸ், மாவட்ட செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் லட்சுமி, மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணை தலைவர் தயாளன் உள்பட நிர்வாகிகள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கல்யாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், ஆலயமணி, சேகர் உள்பட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.