பள்ளிப்பட்டு
தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சானூர்மல்லாவரம் காலனி பகுதி மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிகள் எதுவும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்களுக்கு தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் வழங்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமாரி ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களுக்கு விரைவில் தேசிய ஊரக வேலை திட்டப்பணிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.