மாவட்ட செய்திகள்

புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

சாமளாபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

வீரபாண்டி,

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. அப்போது, அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்திலும், சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிப்பாளையத்தில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14ந்தேதி இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க சென்றனர். அங்கு அவர்களை சமரசம் செய்த மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் சாமளாபுரத்தில் உள்ள மூன்றுசாலை சந்திப்பு பகுதியில் நேற்று காலை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது, தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது பெண்களை தாக்கிய அப்போதைய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கிய பதவி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரை, பல்லடம் தாசில்தார் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு அங்கிருந்த பெண்கள், தங்கள் பகுதிக்குள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும், அந்த கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் கூறினர். பொதுமக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்காததால், நேற்று இரவும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.