மாவட்ட செய்திகள்

பெட்டுகுடி சிவன் கோவிலில் தெவ்வ பண்டிகை கொண்டாடிய படுகர் இன மக்கள்

பெட்டுகுடி சிவன் கோவிலில் படுகர் இன மக்கள் தெவ்வ பண்டிகையை கொண்டாடினர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது குலதெய்வமான ஹெத்தையம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் ஜூலை மாதம் அறுவடை திருவிழாவான தெவ்வ பண்டிகையை நீலகிரியில் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் மஞ்சூர் அருகே எடக்காட்டில் புகழ்பெற்ற மலையாம் பெட்டுகுடி சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தெவ்வ பண்டிகையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 10.30 மணிக்கு மூங்கில் குச்சிகள் மூலம் உராய்வு செய்து, அதில் இருந்து வரும் நெருப்பை கொண்டு கோவிலில் தீபம் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் புதிதாக கன்று ஈன்ற பசுமாட்டில் இருந்து மூங்கில் தொட்டியில் பால் கறந்தனர். அந்த பாலை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மதியம் 12 மணிக்கு சிவனுக்கு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். முன்னதாக ஆடல், பாடல், பஜனை நிகழ்ச்சி மற்றும் படுகர் இன கலாச்சார நடனம் நடைபெற்றது. இதனையடுத்து 1.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

பின்னர் பக்தர்கள் படுகர் இன கலாச்சார குடைகளை ஏந்தியவாறு பேண்டு வாத்தியம் முழங்க சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எடக்காடு நடுஹட்டி விநாயகர் கோலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள குளத்தில் 2 மணிக்கு எடக்காடு சின்ன கணிகை தலைவர் பெள்ளி கவுடர் தலைமையில் உலக அமைதி மற்றும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பால் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று மேல்குந்தா, முள்ளிகூர், முள்ளிமலை, மஞ்சூர் அட்டி, பாக்கோரை, பிக்கட்டி, கரியமலை ஆகிய கிராமங்களிலும் தெவ்வ பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.