மாவட்ட செய்திகள்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் இன்ஸ்பெக்டர்

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை தனது ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று உதவிய பெண் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தினத்தந்தி

திரு.வி.க. நகர், சென்னை தலைமை செயலக போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர், தனது டிரைவர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர் ராஜசேகருடன் நேற்று அதிகாலை 2 மணியளவில் போலீஸ் வாகனத்தில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் தனியாக அழுதபடி நின்றிருந்தார். இதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ரோந்து வாகனத்தை நிறுத்தி அவரிடம் விசாரித்தார்.

அவர், தனது பெயர் சகுந்தலா (வயது 59) என்றும், கர்ப்பிணியான தனது மகள் ஷீலா (30) பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதாகவும், உதவிக்கு யாரும் இல்லை எனவும் கூறினார்.

இதையடுத்து ராஜேஸ்வரி உடனடியாக ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள சகுந்தலா வீட்டுக்கு விரைந்து சென்றார். அவசர உதவி ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தார்.

ஆனால் சகுந்தலா வீடு குறுகிய தெருவில் உள்ளதால் ஆம்புலன்சால் அவரது வீட்டுக்கு முன்பு வர முடியவில்லை. இதனால் வீட்டின் அருகே உள்ள பிரதான தெருவில் ஆம்புலன்ஸ் நின்றது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, வீட்டின் மாடியில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ஷீலாவை, கை தாங்கலாக பிடித்து கீழே அழைத்து வந்து தனது ரோந்து வாகனத்தில் அவரை ஏற்றி அமரவைத்தார்.

இதனை தொடர்ந்து கர்ப்பிணியை ஏற்றிய ரோந்து வாகனம் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்த பிரதான சாலைக்கு வந்தது. பின்பு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் ஷீலாவை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஷீலாவுக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

தக்க சமயத்தில் உதவி புரிந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கும், போலீசாருக்கும் சகுந்தலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பெண் இன்ஸ்பெக்டரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை