வண்டலூர்,
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 48 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி முடிவடைந்தது. அதன் நினைவாக காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய மண்ணிவாக்கம் ஊராட்சியில் அத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மண்ணிவாக்கம் ஊராட்சி செயலர் டி.ராமபக்தன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, லீமாரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறியாளர் மாரிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
காஞ்சீபுரத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் பொன்னையா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணிவாக்கம் ஊராட்சிகளில் 250 அத்தி மரக்கன்றுகள் நடும் பணியை காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து வண்டலூர் வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், பெருமாட்டுநல்லூர், கொண்ட மங்கலம் ஆகிய ஊராட்சியில் தலா 250 அத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.