மாவட்ட செய்திகள்

போலி மது தயாரித்து விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் போலி மது தயாரித்து விற்றவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்னதானப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளுடன் வந்த ராஜேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், 2 அட்டை பெட்டிகளில் 129 போலி மதுபாட்டில்கள் இருந்ததும், அதை அவர் விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் மல்லூர் வாழக்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 52) என்பவரிடம் இருந்து போலி மதுபானங்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும், அதிக போதை வருவதற்காக நச்சுப்பொருளை கலந்து விற்று வருவதாகவும் தெரிவித்தார். இதன்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

வீட்டில் வைத்து தயாரிப்பு

இதனிடையே, தலைமறைவாக இருந்த சந்திரசேகரை கடந்த மாதம் 20 போலி மதுபாட்டில்களை வாழப்பாடி பகுதியில் விற்பனைக்கு எடுத்து சென்றபோது, இரும்பாலை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தியபோது, சந்திரசேகர் தனது வீட்டில் போலி மது தயாரித்து விற்பனை செய்து வந்ததும், அவர் வைத்திருந்த மதுபாட்டில்களில் தமிழக அரசு மதுபான கடையில் பயன்படுத்தப்படும் லேபிள்கள் போன்று போலி லேபிள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி போதை வருவதற்காக வைத்திருந்த அட்ரோபின் திரவம் மற்றும் உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சந்திரசேகர், பல மாதங்களாக போலி மது தயாரித்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று சந்திரசேகரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும், இது பற்றிய தகவலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் தெரிவித்தனர்.