சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ரூ 1 லட்சத்து 24 ஆயிரத்து 350 மதிப்புள்ள காலாவதியான உணவுபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மன்னார்குடி நகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் மன்னார்குடி டெப்போ ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை-காலாவதியான உணவு பொருட்கள் கொட்டப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணாழகன், செல்வகுமார், குருசாமி, அன்பழகன் மற்றும் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வையாபுரி,துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யகூடாது. மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.