மாவட்ட செய்திகள்

ஆசிய பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி,

ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த மணிமாறன்(வயது 46) 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் புதுக்கோட்டை வனத்துறையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் இந்திய அணி சார்பில் 74 கிலோ பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் பெற்ற அவர் நேற்று திருச்சி திரும்பினார்.

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு 3-வது நடைமேடையில் வந்திறங்கினார். மணிமாறனுக்கு அவரது பயிற்சியாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பூங்கொத்துகள், சால்வைகள் அளித்து வரவேற்றனர். மேலும் அவரை உற்சாகத்தில் தூக்கி பாராட்டினர். மணிமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஆசிய போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றேன். தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் நடந்த போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் 2-வது முறையாக வென்றுள்ளேன். இந்த போட்டியில் 567.5 கிலோ தூக்கி பதக்கம் பெற்றேன். போட்டியில் 15 நாடுகள் பங்கேற்றன. இதுதவிர சிறந்த பளு தூக்கும் வீரராக ஆசிய இரும்பு மனிதன் என்ற விருதும் எனக்கு கிடைத்தது. பிளஸ்-2 படித்த பின் கல்லூரி படிக்கும் போது அண்ணா விளையாட்டரங்கத்தில் வலு தூக்கும் போட்டிக்கு பயிற்சி பெற்றேன். அப்போது பயிற்சியாளர் பாலசுப்ரமணியன், நான் உயரம் குறைவாக இருப்பதால் பளு தூக்கும் பிரிவில் பங்கேற்க அறிவுறுத்தினார். அதன்பின் அண்ணா விளையாட்டரங்கத்தில் பயிற்சி பெற்றேன். அதன்பின் சுப்ரமணியபுரத்தில் பயிற்சியாளர் லோகநாதனிடம் பயிற்சி பெற்றேன். அங்கு பெற்ற பயிற்சி மூலம் நான் சாதனை படைக்க முடிந்தது.

கல்லூரியில் படிக்கும் போது பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளேன். கடந்த 2000-ம் ஆண்டு வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி நிரந்தரமானது. வனத்துறை சார்பில் நடந்த போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். கடந்த 2005-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவரிடம் விருது பெற்றுள்ளேன்.

நான் உயரம் குறைவாக இருப்பதால் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. ஆசிய போட்டியில் பதக்கம் வென்றால் ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்படும். அதேபோல வனத்துறையிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல அனைத்து விளையாட்டிற்கும் முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். வருகிற செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தோடு திரும்புவேன். அரசு எனக்கு உதவி செய்தால் மேலும் பல சாதனைகள் படைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில் நிலையத்தில் அவருக்கு அளித்த வரவேற்பை பார்த்து மணிமாறன் ஆனந்த கண்ணீர் வடித்தார். ரெயில் நிலையத்தில் இருந்து அவரை திறந்த ஜீப்பில் ஏற்றி ஊர்வலமாக வீட்டிற்கு நண்பர்கள், சக வீரர்கள் அழைத்து சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...