புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராமலிங்கம் (வயது 48) என்பவர் ஓட்டி னார்.
அந்த பஸ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் திரும்ப முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நுழைவுவாயிலின் ஒரு பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பஸிசின் முன்பகுதி சேதமடைந்தது. ராமலிங்கம் காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பஸ் மோதிய வேகத்தில் நுழைவுவாயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சுவற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி 2-வது முறையாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயிலில் அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்று 3-வது முறையாக நுழைவுவாயிலில் அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து அரசு பஸ் டிரைவர்கள் சிலர் கூறுகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி நுழைவு வாயில் முன்பு கார் பார்க்கிங் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மழை பெய்து கொண்டிருக்கும்போல் இந்த கார் பார்க்கிங் கற்களில் அரசு பஸ்கள் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நுழைவுவாயிலில் மோதி விடுகிறது.
ஆகவே, நுழைவுவாயில் முன்பு உள்ள கார் பார்க்கிங் கற்களை அகற்றி விட்டு, தார் சாலை அமைக்க வேண்டும் என கூறினார்கள்.