மாவட்ட செய்திகள்

தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறாததற்கு மாநில அரசே காரணம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

“நீட்” தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது என்றும், தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறாததற்கு மாநில அரசே காரணம் என்றும் சேலத்தில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேலம்,

நீட் தேர்வு முடிவுகளை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். இதற்கு தமிழக மாணவர்களை குற்றம் சொல்லக்கூடாது. மாநில அரசு மீது தான் குற்றம் சொல்ல வேண்டும். அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது. 28 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கே செல்வதில்லை என்றும், மிகவும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

அதேபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து தரமான கல்வியை வழங்க வேண்டும். இதேநிலை நீடித்தால் தமிழக மாணவர்கள் மிக மோசமான நிலைக்கு செல்ல வேண்டியதாகிவிடும். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், ஒருசில முடிவுகளை எடுத்து செயல்படுத்தியுள்ளார். அவரது முயற்சிக்கு நான் பாராட்டு தெரிவித்துள்ளேன்.

இன்னும் அவர் வேகமாக செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள அரசை புதிய அரசாகவே பார்க்கிறேன்.

மாநில அரசே காரணம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் இருக்கிறது. நீட் தேர்வு நடைபெறாது என்று அரசியல்வாதிகள் கடைசி வரை உறுதியளித்தனர். ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியது. தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறாததற்கு மாநில அரசே காரணம்.

அரசியல்வாதிகள் தவறாக வழி நடத்திய காரணத்தினால் தமிழக மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற மற்றும் தேர்ச்சி குறைந்ததற்கு காரணம். அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் குழந்தைகளும், அரசு பள்ளிகளில் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டும்.

தோற்பது உறுதி

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரவு கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர் தோற்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது பற்றி மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.