தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பூதலூர், செங்கிப்பட்டி பகுதிகளில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீரை நம்பி தான் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் கடந்த 25-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 27-ந் தேதி கலெக்டரை நேரில் சந்தித்து பேசி முடிவு செய்யலாம் என உறுதி அளிக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்படி நேற்று தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அழைத்து கலெக்டர் அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நாளை(அதாவது இன்று) மாலை முதல் பொய்கைகுடி தடுப்பணையில் இருந்துபுதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணை மூடப்படும் வரை தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதி அளித்தார். இதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.