மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லாரி மோதி பலி மகன் கண் முன்பே பரிதாபம்

திருப்பத்தூரில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை சவுளூரை சேர்ந்தவர் ரவி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 38). இவர்களது மகன் ஆதித்யா. நேற்று ஆதித்யா தனது தாய் ராஜேஸ்வரியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றார்.

கிருஷ்ணகிரி மெயின்ரோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்திருந்த ராஜேஸ்வரி திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி ராஜேஸ்வரியின் மீது ஏறி இறங்கியது. இதில் ராஜேஸ்வரி தனது மகன் ஆதித்யா கண் முன்னே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தாய் பிணமாக கிடப்பதை கண்டு ஆதித்யா கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாமக்கலை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.