பொள்ளாச்சி
ஆனைமலை பகுதியில் உள்ள தோட்டங்களில் தாமிர கம்பிகளை திருடி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தாமிர கம்பிகள்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, நெல், கரும்பு, வாழை மற்றும் மானாவாரி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து மோட்டார் அறை வரைக்கும் ஓயர் மூலம் மின் இணைப்பு கொடுத்து உள்ளனர்.
இதற்கிடையில் இரவு நேரங்களில் இங்கு வரும் மர்ம ஆசாமிகள் மின்சார ஓயர்களில் இருந்து தாமிர கம்பிகளை திருடி செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தடுக்க வேண்டும்
ஆனைமலை அருகே செமனாம்பதி, மாரப்பகவுண்டன்புதூர், ஒடையகுளம் மற்றும் தமிழக-கேரள எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மின்சார ஓயர்களை திருடி செல்கின்றனர்.
பின்னர் திருடப்பட்ட ஓயர்களை தீயிட்டு எரித்து தாமிர கம்பிகளை எடுக்கின்றனர். அதை கிலோ ரூ.700 வரை விற்பனை செய்கின்றனர்.
அடிக்கடி ஓயர்கள் திருடுபோவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ கழிவுகள் பிடிப்பட்ட பகுதியில் ஓயர்களை எரித்து தாமிர கம்பிகளை எடுத்தற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி தாமிர கம்பிகளை திருடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.