மாவட்ட செய்திகள்

ரூ.3 லட்சம் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் திருட்டு

டாரஸ் லாரியில் இருந்த ரூ.3 லட்சம் தேங்காய் எண்ணெய் டப்பாக்கள் மர்ம நபர்கள் திருடியதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

விழுப்புரம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37) என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 18-ந் தேதியன்று எனது டாரஸ் லாரியில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து 888 தேங்காய் எண்ணெய் பெட்டிகளை (ஒரு பெட்டியில் 175 மி.லி. அளவு கொண்ட 100 எண்ணெய் டப்பாக்கள்) ஏற்றிக்கொண்டு தார்பாய் போட்டு மூடி கயிறு மூலம் கட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நிறுவனத்தில் இறக்குவதற்காக புறப்பட்டேன். அதிகாலை 3 மணியளவில் அனுமந்தை சுங்கச்சாவடி வழியாக புதுச்சேரி சுங்கச்சாவடி, கேளம்பாக்கம், வண்டலூர், மீஞ்சூர் சுங்கச்சாவடி வழியாக சென்று காலை 9.30 மணிக்கு தடா சோதனைச்சாவடியை கடந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டேன்.

அதன் பிறகு அன்று இரவு 11.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் எம்.நகுலப்பள்ளியில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வாகனத்தை எடுக்க வரும்போது வாகனத்தில் கயிறு அவிழ்ந்திருந்தது. உடனே நான் மேலே ஏறி பார்த்தபோது தார்பாய் கிழிக்கப்பட்டு 39 அட்டைப்பெட்டிகளில் இருந்த 3,900 எண்ணெய் டப்பாக்களை யாரோ தார்பாயை கிழித்து திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். வெண்ணாங்குப்பட்டு, புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் நிலைய எல்லையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்க்கும்போது தார்பாய் கிழியாத நிலையில் இருந்தது. அனுமந்தை சுங்கச்சாவடியை கடந்து மரக்காணத்தில் ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு விட்டு புறப்பட்ட சமயத்தில் யாரோ எனது டாரஸ் லாரியின் மேல் ஏறி தார்பாயை கிழித்து அதிலிருந்த தேங்காய் எண்ணெய் டப்பாக்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது அங்கிருந்த போலீசார், எனது புகாரை வாங்க மறுத்துவிட்டனர். எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்காய் எண்ணெய் டப்பாக்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.