மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே வேன்-லாரி மோதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

ஆம்பூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் தாறுமாறாக ஓடி சாலையின் மறுபக்கம் பாய்ந்து லாரி மீது மோதியதில் 2 பெண் தொழிலாளர்கள் உள்பட 3 பேர் இறந்தனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் தாறுமாறாக ஓடி சாலையின் மறுபக்கம் பாய்ந்து லாரி மீது மோதியதில் 2 பெண் தொழிலாளர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் 27 பெண்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயங்கரமாக மோதியது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் ஒன்று வாணியம்பாடி நெக்குந்தி பகுதியை சேர்ந்த 30 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை ஆம்பூரை அடுத்த வடசேரி பகுதியை சேர்ந்த டிரைவர் ராமன் (வயது 35) ஓட்டி வந்தார். அவர் செல்போன் பேசியவாறு வேனை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

காலை 8 மணியளவில் வேன் ஆம்பூர் நகரின் சோலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மேம்பாலத்தையொட்டிய பகுதியில் வளைவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையின் மையப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி எதிர்திசையில் வாகனங்கள் வரும்பாதையில் பாய்ந்தது.

அப்போது வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. வேன் மீது லாரி மோதியபோது ஏற்பட்ட சத்தம் அந்த பகுதியையே அதிர வைத்தது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

மீட்பு பணி

உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் விபத்து நடந்த இடத்துக்குஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேனின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் கடப்பாரை உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து உடைத்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். அப்போது வேன் டிரைவர் ராமன் மற்றும் அவரது இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த வாணியம்பாடி நெக்குந்தி பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மனைவி பவுனம்மாள் (28), மணி என்பவர் மனைவி பூர்ணிமா (20) ஆகிய 3 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். 27 பெண்கள் காயம் அடைந்தனர்.

இதனிடையே அங்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின் 9 பெண்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தியபின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நேரில் ஆறுதல்

தகவல் அறிந்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களிடம் சிகிச்சை குறித்து டாக்டர்கள் விளக்கினர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், தேவராஜி, ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினர்.

விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.