காட்டுப்புத்தூர்,
காட்டுப்புத்தூர் அருகே முதியவர் கொலை வழக்கில் பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
முதியவர் கொலை
காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் திருப்பதி (வயது 70). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக இவரது மூத்த மகன் சின்னப்பன் என்பவர் காட்டுப்புத்தூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பதி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பேரன் உள்பட 3 பேர் கைது
மேலும், திருப்பதியின் வீட்டில் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாகவும், இதேபோல தகராறு ஏற்பட்டதில், திருப்பதியின் பேரன் கிருஷ்ணகுமார்(25) மற்றும் சிலர் திருப்பதியை அடித்து கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் செட்டிபாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர்களான சின்னப்பன் மகன் கிருஷ்ணகுமார் மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை பாலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (21), ஸ்ரீராமசமுத்திரத்தை சேர்ந்த ராமதுரை (37) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.