சேலம், மே.3-
பெயிண்டர் வீட்டுக்கு தீ வைத்த வழக்கில் கைதான அண்ணன், தம்பி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெயிண்டர்
சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர்கள் யாசின் (வயது 26), தேவராஜ் (26) மற்றும் அவருடைய தம்பி ஹரிஸ் கோகுல் (21). இவர்கள் 3 பேரும், கடந்த மாதம் சின்னதிருப்பதி காளியம்மன் கோவில் திருவிழாவின் போது காந்திநகரை சேர்ந்த பெயிண்டரான ஆனந்தராஜ் (24) என்பவரை கிண்டல் செய்து அவமானப்படுத்தினர். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது யாசின் உள்பட 3 பேரும் சேர்ந்து ஆனந்தராஜை தாக்கினர்.இந்த நிலையில் அவர்கள் கடந்த மாதம் 17-ந் தேதி ஆனந்தராஜ் வீட்டுக்கு சென்று அவரை கத்தி மற்றும் வீச்சரிவாளால் தாக்க முயன்றனர். மேலும் யாசின் உள்பட 3 பேரும் அவரது வீட்டுக்கு தீ வைத்தனர். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசின் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் விசாரணையில் அவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 16-ந் தேதி சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்த சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடம் கத்திமுனையில் ரூ.5 ஆயிரம் பறித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் யாசின், ஹரிஸ் கோகுல், தேவராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து யாசின், ஹரிஸ் கோகுல், தேவராஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.