மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்,

வறட்சியால் பயிர்கள் பாதிப்பு

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால், வறட்சி நிலவுகிறது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகி வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மாநிலம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து ஆய்வு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 39 கிராமங் களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை செயற்கை கோள் உதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதியுடன் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

கணக்கெடுப்பு பணி

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு நிவாரண தொகை அளவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து விவசாய பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை வறட்சியால் பாதித்த பயிர்கள் குறித்து முன்கூட்டியே கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள் வறட்சியால் பாதித்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி விவரங்கள்

ஒவ்வொரு வருவாய் கிராம அளவிலும் கிராம அடங்கல் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட் டுள்ள பயிர்களின் விவரங் கள், பரப்பளவு பதிவு செய்யப்படும். அதை கொண்டு வறட்சியால் பாதிக் கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத் தப்பட்டு வருகிறது. அதில் விவசாயி பெயர், முகவரி, செல்போன் எண், வங்கி கணக்கு எண், ஆதார் எண், நிலத்திற்கான சர்வே எண், பயிர், சாகுபடி பரப்பளவு, பாதிப்பு விவரங்கள் சேகரிக் கப்பட்டு வருகின்றன. மேலும் பயிர் சேதத்தை பொறுத்தவரை 33 சதவீதம், 33 முதல் 50 சதவீதம், 50 சதவீதத்திற்கு மேல் என 3 விதமாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்திற்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.