மாவட்ட செய்திகள்

மாநில நிதி ஆதாரங்களை அதிகப்படுத்த முயற்சிக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

புதுச்சேரி, கடன் பெறுவதை சார்ந்து இருக்காமல் மாநில நிதி ஆதாரங்களை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுவை சட்டசபையில் கவர்னரின் செய்தியை சபாநாயகர் வைத்திலிங்கம் வாசித்தார். அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:-

வரி வசூலை முறைப்படுத்த வேண்டும்

புதுவை யூனியன் ஆட்சி பிரதேச மக்களின் முன்னேற்றத்திற்கான, ஆக்கப்பூர்வமான மிகவும் பயனுள்ள ஒரு கூட்டமாக இது அமைய வேண்டும் என்ற என் விருப்பத்தை எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தருணத்தில் எம்.எல்.ஏ.க்கள் தற்போது யூனியன் ஆட்சிபரப்பிலுள்ள அவசியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். யூனியன் ஆட்சிபரப்பின் இந்த வருட நிதிநிலையானது கிட்டத்தட்ட ரூ.6,665 கோடியாகும். இதில் 60 சதவீதம் சொந்த வளங்கள் மூலமும், 28 சதவீதம் மத்திய அரசின் உதவியுடனும், மீதமுள்ள 12 சதவீதம் சந்தை கடன்கள் மற்றும் ஒப்பந்த கடன்கள் மூலமாகவும் ஈடுகட்டப்படுகிறது.

நம்மிடம் ரூ.6 ஆயிரம் கோடி விருப்புறுதி கொடை கடன் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கடனின் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கு அரசு ரூ.700 கோடியை செலவழிக்கிறது. இத்தொகையானது வரும் ஆண்டு முதல் ரூ.1000 கோடிக்கும் மேல் அதிகரிக்கும். கடன்களை ஏற்றுக்கொள்வதற்காக மத்திய அரசை நாடும் அதேவேளையில் வெளிக்கடன்களை பெறுதலை நாம் சார்ந்திருக்காமல் மாநில நிதி ஆதாரங்களை நாம் அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதிலே முக்கியமான ஒன்று குடிமுறை வசதிகளுக்கான வடிகால் கட்டணம், தண்ணீர் வரி, உள்ளாட்சி வரிகள் போன்ற சேவை மற்றும் உபயோகிப்பாளர் கட்டணங்களை முறையாக வசூலிப்பது ஆகும்.

கிராமங்களில் வசதிகள்

யூனியன் ஆட்சிப்பரப்பு நிர்வாகம் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் இயங்குவதற்காக ரூ.700 கேடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இவற்றின் மூலம் இதுவரையில் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவை தொடர்ந்து செயல்படுவதற்காக அரசானது நிதிநிலையில் வருடத்திற்கு ரூ.150 கோடி அளவுக்கு செலவிடுகிறது. இந்த அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சங்கங்களில் இருந்து முதலீட்டை திரும்ப பெறுவதற்கான வழிவகைகள் சம்பந்தமாக நாம் விவாதிக்கவேண்டும்.

நகர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படையான சமமின்மை நிலை இருக்கிறது. கிராமப்புறத்தில் இருந்து வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளுக்காக நகரத்தை நோக்கி மக்கள் செல்வதை தவிர்த்து, கிராமப்புறங்களிலேயே அந்த வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் இல்லாத காரணத்தினால், கிராமப்புற மக்களின் நலன்களை பேணும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடமே உள்ளது.

திறந்தவெளி கழிப்பிடங்கள்

திறந்தவெளி கழிப்பிடங்கள் பொது சுகாதாரத்திற்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. கழிவுகளை அகற்றும் பணியை செய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படும்போது, அவர்களின் மனித தன்மையையும், தரத்தையும் குறைவுபடுத்த நேரிடுகிறது. நகரப்பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் இந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் மேலோங்கி இருக்கிறது.

யூனியன் ஆட்சி பரப்பினுடைய 51 சதவீத வீடுகளில் மட்டுமே தனிப்பட்ட கழிவறைகள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக குறைந்த செயல் நிறைவேற்றமுள்ள மாநிலம், யூனியன் ஆட்சிபரப்புகளில் புதுச்சேரி யூனியன் ஆட்சி பிரதேசம் சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ந்தேதிக்குள் புதுச்சேரியில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கி அவ்வாறு அறிவிக்கப்பட புதுச்சேரி அரசு முன்னரே பொறுப்பேற்றுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

சுத்தமாக இருப்பது என்பது இறைத்தன்மைக்கு அடுத்ததாகும். நமது சட்டமும், நீதிமன்ற உத்தரவுகளும், உற்பத்தியாகின்ற கழிவுகள் விஞ்ஞான ரீதியாக அகற்றப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. கழிவுகளை பெறும் நிலையிலேயே பிரித்தெடுப்பதும், கிராமப்புறங்களிலேயே பரவலாக அவைகளை தீர்வு செய்வதும் உடைமையாளர்களை இதிலே ஈடுபடுத்துவதன் மூலம் திட்டமிடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தியில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.