மாவட்ட செய்திகள்

சேலம் அருகே நின்ற டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 4 பேர் பலி கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து

சேலம் அருகே நின்ற டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 15வது வார்டை சேர்ந்தவர் சின்னசாமி(வயது51). இவர் நேற்று முன்தினம் காலை உறவினர்கள், நண்பர்கள் என 38 பேரை 2 சரக்கு ஆட்டோக்களில் அழைத்துக் கொண்டு தம்மம்பட்டி வழியாக குலதெய்வம் கோவிலான கொல்லிமலையில் உள்ள பெரியசாமி கோவில் மற்றும் எட்டுக்கை காளியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர்கள் கிடா வெட்டி சமைத்து விருந்து சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்புவதற்காக சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு சரக்குஆட்டோ தம்மம்பட்டி வந்தபோது பழுது அடைந்தது. இதனால் அந்த ஆட்டோவில் இருந்த அனைவரும் இறங்கி ஒரே சரக்குஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த சரக்குஆட்டோவை செல்வம்(30) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணியளவில் கெங்கவல்லி அருகே கூடமலை ஒத்தலகாடு பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியது.

இதில் ஆட்டோவில் வந்த கூலித்தொழிலாளிகளான கோவிந்தன் (60), பெரியண்ணன்(45), அய்யாவு(60) ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சின்னசாமி, டிரைவர்செல்வம், சிரஞ்சீவி, முத்துலட்சுமி, பிரகாஷ் உள்பட 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, சேகர், ஏட்டு சகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 11 பேரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் இதில் முத்துலட்சுமி உள்பட 6 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறிது நேரத்தில் முத்துலட்சுமி(24) பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் பலியான 4 பேரும் கெங்கவல்லி 15வது வார்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதையொட்டி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறியடித்தபடி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கொல்லிமலையில் உள்ள கோவிலுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து சென்ற சின்னசாமி கெங்கவல்லி பேரூராட்சி தேர்தலின் போது 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் சின்னசாமி தேர்தலில் நிற்பதற்காக அந்த பகுதியில் உள்ள உறவினர்கள், நண்பர்களை கொல்லிமலையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று விருந்து வைத்து உள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கி 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது.