மும்பை,
மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் உள்ள கன்சோலி ரெயில் நிலையத்தில் அறிவிப்பாளராக பணியாற்றி வருபவர் சர்மிளா (வயது29). சம்பவத்தன்று காலை இவர் அறிவிப்பாளர் அறையில் இருந்து ரெயில் விவரங்களை அறிவித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் 3-வது பிளாட்பாரத்தில் ஏதோ பிரச்சினை நடப்பதாகவும், ஸ்டேசன் மாஸ்டர் அழைப்பதாகவும் சர்மிளாவிடம் கூறினார்.
இதையடுத்து அவர் உடனடியாக 3-வது பிளாட்பாரத்திற்கு சென்றார். ஆனால் அங்கு பிரச்சினை ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து அவர் அறிவிப்பாளர் அறைக்கு திரும்பி வந்தார். அப்போது அறையில் இருந்த அவரது பணப்பை மாயமாகி இருந்தது.
இதையடுத்து மர்ம ஆசாமி திட்டமிட்டு தன்னை வெளியே போக வைத்து பணப்பையை திருடி சென்றதை சர்மிளா உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நூதன முறையில் பணப்பையை திருடி சென்றவரின் அடையாளத்தை தெரிந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கன்சோலி ரெயில்நிலையத்தில் சுற்றித்திரிந்த அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் சந்தோஷ் ஜாதவ் (38) என்பது தெரியவந்தது.