தஞ்சாவூர்,
13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்று அதை ஈடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 14-ந்தேதி மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் 13 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர்புற பணிமனையில் 124 டவுன் பஸ்கள் உள்ளன. இதில் நேற்று அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள், ஒப்பந்த டிரைவர்களை கொண்டு 48 பஸ்கள் இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் அனைத்தும் பணிமனையிலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கரந்தையில் உள்ள புறநகர் பணிமனையில் 58 பஸ்கள் உள்ளன. இவற்றில் 52 பஸ்கள் இயக்கப்பட்டன.
50 சதவீத பஸ்கள் ஓடவில்லை
அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் 22 பஸ்கள் உள்ளன. இவற்றில் பகல் நேரத்தில் 8 பஸ்களும், இரவு நேரத்தில் 14 பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி நேற்று பகலில் 1 பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இரவில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் 480 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் நேற்று 12 மணி வரை 240 பஸ்கள் ஓடின. இது 50 சதவீதம் ஆகும். 240 பஸ்கள் ஓடவில்லை. அதாவது 50 சதவீத பஸ்கள் ஓடவில்லை. ஊழியர்களில் நேற்று 50 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் தஞ்சை புதிய பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிராமப்புற பகுதிகளுக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தனியார் பஸ்கள், மினிபஸ்கள் வழக்கம்போல் நகர்புற பகுதிகளில் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கும் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர். பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தால் ரெயில் களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
36 குழுக்கள் கண்காணிப்பு
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறை, போலீஸ்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பணிமனையிலும், பஸ் நிலையத்திலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல வட்டார அளவில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 13 போக்குவரத்து கழக பணிமனையிலும், 22 பஸ் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.