வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 47). இவர் நேற்று முன்தினம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு தங்கியிருந்த தனது மகன் வெங்கட் (10) என்பவருடன் காட்டாங்கொளத்தூர் கடைவீதிக்கு சென்றார். ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த வேன் கண் இமைக்கும் நேரத்தில் எல்லப்பன், வெங்கட் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எல்லப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் வெங்கட் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து மறைமலை
நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
கூடுவாஞ்சேரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அன்பு(39), இவர் கடந்த 8ந் தேதி இரவு கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் அன்பு மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்கிசிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.