நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆண்டுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:-
கவுன்சிலர் அறிவு (தி.மு.க.):- 13 ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆகையால் தலைவர் அவருடைய இருக்கையில் அமராமல் கவுன்சிலர்கள் இருக்கையில் அமரவேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி):- ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அவருடைய இருக்கையில் தான் அமருவார். இதுகுறித்து விவாதிக்கும் கூட்டம் இது அல்ல. இது சிறப்பு கூட்டம் என்பதால் கூட்டப் பொருள் மட்டுமே ஒன்றிய கவுன்சிலர்கள் பேச வேண்டும்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது.
கவுன்சிலர் முருகன் (அ.தி.மு.க.):- சித்தர்கள் நத்தம், நடகோட்டை ஆகிய ஊர்களுக்கு இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் 7 கி.மீட்டர் தூரம் சுற்றி இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி):- பாலம் கட்டுவது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்து உரிய திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.
கூட்டத்தையொட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.