மும்பை,
மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு வகோலா பைப்லைன் மதராஸ்வாடி காவ்தேவி பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பைப்லைன் ஓரமாக உள்ள இந்த குடிசை வீடுகளை மாநகராட்சி நேற்றுமுன்தினம் முதல் இடித்து தள்ளியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதாக குடியிருப்புவாசிகள் கூறினர். ஆனால் அவர்கள் மனு மட்டுமே தாக்கல் செய்து உள்ளனர்.
ஐகோர்ட்டு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று 2வது நாளாக மாநகராட்சியினர் பொக்லைன் எந்திரங்களுடன் வந்து அங்கிருந்த குடிசை வீடுகளை இடித்து தள்ளும் பணியை மேற்கொண்டனர். இதன்படி அங்கிருந்த சுமார் 500 குடிசை வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்து குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
பெரியவர்களும், சிறியவர்களும் அழுதபடியே இருந்தனர். வீடுகள் இடித்து தள்ளப்பட்டதால் பலர் அங்குள்ள மாரியம்மன் கோவிலிலும், மைதானத்திலும் தங்கள் உடைமைகளுடன் தஞ்சம் அடைந்து உள்ளனர்.