திண்டுக்கல்:
மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. திண்டுக்கல்லில், முக்கிய பாலங்கள் அடைக்கப்பட்டதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கட்டுப்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. காலை 10 மணியோடு காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. எனினும் கொரோனா பரவல் குறையவில்லை. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 11 சோதனை சாவடிகள், 37 முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் காலை 10 மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டன. இதற்காக திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட முக்கிய நகரங்களின் எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
வாகனங்கள் பறிமுதல்
அதேபோல் நகரங்களுக்கு வெளியே இருந்து தேவையின்றி வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் திண்டுக்கல் பொறுத்தவரை நத்தம் சாலை மேம்பாலம், மதுரை சாலை, திருச்சி சாலை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால் காலை 10 மணிக்கு மேல் திண்டுக்கல் நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் நகரில் இருந்து வெளியே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதோடு ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
லாரியில் ஏற்றினர்
திண்டுக்கல்-மதுரை சாலையில் தோமையார்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றிய 10-க்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த வாகனங்களை லாரியில் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அங்கு லாரி வரவழைக்கப்பட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களை வைத்தே, போலீசார் லாரியில் ஏற்ற வைத்து தண்டனை வழங்கினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் நடத்திய சோதனையில் 371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் 11 சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து இ-பதிவு இல்லாமல் வந்தவர்கள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதற்கிடையே திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு, பழனி சாலையில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காய்கறி வாங்க குவிகின்றனர். இதனால் தற்காலிக மார்க்கெட் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
இந்த தற்காலிக மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று காலை திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது கொரோனா பரவலை தடுக்க கூட்டத்தை குறைக்க வேண்டும். இதற்கு காய்கறி மார்க்கெட்டை 4 பகுதியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். அதற்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேவையின்றி சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலை 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு மேலும் சில இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.