மாவட்ட செய்திகள்

தேனியில் போலீஸ் கெடுபிடியால் பாதிப்பு: காய்கறி விற்பனையை நிறுத்திய உழவர் சந்தை விவசாயிகள்

தேனியில் போலீஸ் கெடுபிடியால் காய்கறி விற்பனையை உழவர் சந்தை விவசாயிகள் திடீரென நிறுத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

தினத்தந்தி

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியானது நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், இங்கு உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. மக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதற்காக நடமாடும் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்த விவசாயிகள் 40 பேருக்கு வார்டு வாரியாக பிரித்து அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வார்டுகளில் சென்று காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், அனுமதியின்றி வியாபாரிகள் பலரும் ஆட்டோ, டிராக்டர், மினிலாரி போன்ற வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

போலீஸ் கெடுபிடி

அனுமதி பெறாத வியாபாரிகளும் காய்கறி விற்பனை செய்வதால் நகரில் ஆங்காங்கே மக்கள் கூட்டமாக கூடி காய்கறிகள் வாங்குகின்றனர். இதனால், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டமாக கூடும் வகையில் காய்கறி விற்பனை செய்பவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர். அவ்வாறு கூட்டம் கூடும் இடங்களில் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பாதிக்கப்பட்ட உழவர் சந்தை விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் காய்கறி விற்பனையை நிறுத்தி வாகனங்களை தேனி உழவர் சந்தை அலுவலகம் முன்பு நிறுத்தினர். போலீசார் கெடுபிடி செய்வதால் தங்களால் காய்கறி விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக உழவர் சந்தை அலுவலர்களிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். உழவர் சந்தை அலுவலகத்தில் விவசாயிகளிடம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி காய்கறி விற்பனை செய்பவர்களால் உழவர் சந்தை விவசாயிகள் பாதிக்கப்படுவதால் அதை தடுக்க வேண்டும் என்றும், அனுமதிச்சீட்டு வாங்கி காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் உழவர் சந்தையில் வழங்கிய அடையாள அட்டை அணிந்தும், அனுமதிச்சீட்டை வைத்துக் கொண்டும் காய்கறி விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் காய்கறி விற்பனை செய்பவர்கள் குறித்து போலீசாரிடமோ, உழவர் சந்தை அலுவலகத்திற்கோ தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் சமரசம் அடைந்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு விவசாயிகள் மீண்டும் காய்கறி விற்பனை செய்ய சென்றனர். இதனால், தேனியில் நேற்று காலை நேரத்தில் காய்கறிகள் கிடைக் காமல் மக்கள் பரிதவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை