மாவட்ட செய்திகள்

கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் மூலம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தகவல்

கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம் மூலம் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தென்காசி உதவி ஆணையர் கோமதி தெரிவித்துள்ளார்

தென்காசி:

கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம் மூலம் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தென்காசி உதவி ஆணையர் கோமதி தெரிவித்துள்ளார்.

நலவாரியம் மூலம் விண்ணப்பம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தின் மூலம் நிதி உதவியை பெற விரும்பும் உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற வேண்டுமென்று அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் மூலம் நடத்தப்படும் சீராய்வு கூட்டங்கள் வாயிலாக சார்நிலை அலுவலர்களை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர் மூலம் நடத்தப்படும் துறைவாரியான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து நடைபெறும் சீராய்வின் போதும் நலத்திட்ட உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை தென்காசி மாவட்ட உதவி ஆணையர் சரகத்திற்கு உட்பட்ட கிராம கோவில் பூசாரி நலவாரிய உறுப்பினர்களிடமிருந்து ஓய்வூதியம் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் வரப்பெறாமல் இருந்து வருகிறது.

உரிய ஆவணங்களுடன்..

இந்து சமய அறநிலையத்துறை மூலம் கிராம கோவில் நலவாரிய உறுப்பினர்களுக்கு இந்த துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4000, கிராம கோவில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர் மரணம் அடைந்தால் ஈமச்சடங்கிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர மூக்கு கண்ணாடிக்கு ரூ.500, திருமண உதவி (மகன் அல்லது மகள்) ரூ.6000, உறுப்பினரின் ஒரு குழந்தைக்கு கல்வி உதவித் திட்டம், உறுப்பினர் விபத்து உதவி, மகப்பேறு நிதியுதவி (ஒரு குழந்தைக்கு) என்பன போன்ற நலச்சட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த திட்டத்தினை கிராம கோவில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் பயன்படுத்தி பயன்பெறும் பொருட்டு அதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்ப படிவங்களை தாங்கள் பணிபுரியும் கிராம கோவில்களின் அருகிலுள்ள தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், புளியங்குடி சரக ஆய்வர்களிடம் பெற்று உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு இந்தத் துறை சார்ந்த ஆய்வர் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் புதிதாக வாரியத்தின் உறுப்பினர் ஆக விரும்பும் பூசாரிகள் 18 வயது நிறைவு பெற்றவராகவும் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் பூஜை செய்து வரும் திருக்கோவில் இந்த துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோவில் ஆக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ளவர்கள் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவு கட்டணம் எதுவும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.