மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில், ஊரக வளர்ச்சி அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விழுப்புரம்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 51). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு இல்லத்தில் தங்கியிருந்து வருகிறார்.

இவர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செய்யப்படும் சாலை பணிகள், பாலம் கட்டுமான பணிகள், அரசு வீடு கட்டும் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லஞ்சம் வாங்குவதாகவும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி நேற்று அதிகாலை 5.50 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் மகேந்திரன் தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு சென்றனர்.

அங்கு வீட்டின் கதவை போலீசார் தட்டினர். சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே வந்த மகேந்திரனிடம், தாங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்றும், வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவர்களை பார்த்ததும் மகேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவரை வெளியில் எங்கும் செல்லாத அளவிற்கு வீட்டிற்குள் அமர வைத்து கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளை பூட்டிக்கொண்டு காலை 6 மணியளவில் போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர். லஞ்சப்பணம் ஏதேனும் இருக்கிறதா? என்று வீட்டில் உள்ள 4 அறைகளிலும் அங்குலம், அங்குலமாக போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதுதவிர வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து சோதனையிட்டதோடு, வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அவர் பயன்படுத்தி வரும் 2 அரசு வாகனங்களின் கதவுகளையும் திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் திட்ட இயக்குனர் மகேந்திரனிடம், நீங்கள் விழுப்புரத்தில் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து இதுநாள் வரை எத்தனை கோடி ரூபாய் மதிப்பில் அரசு திட்டப்பணிகள் நடந்துள்ளது என்றும், இதில் யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகையை லஞ்சமாக பெற்றுள்ளர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சோதனை மாலை 5.10 மணிக்கு முடிவடைந்தது. 11 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் போது திட்ட இயக்குனர் மகேந்திரன் வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை.

ஆனால் வங்கி தொடர்பான 13 முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவற்றை கைப்பற்றிய போலீசார் அதை பத்திரமாக 2 பைகளில் போட்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

விழுப்புரத்தில் திட்ட இயக்குனர் மகேந்திரன் தங்கியுள்ள அரசு இல்லத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான நிலக்கோட்டையில் உள்ள பூர்வீக வீட்டிலும், சென்னை எழும்பூர் அருகே சேத்துப்பட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலும் மற்றும் திருச்சி அருகே திருவானைக்காவல் பகுதியில் உள்ள மகேந்திரனின் மாமனார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் மற்றும் சொத்து சம்பந்தமான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் உள்பட 4 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும் மற்ற 3 இடங்களில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ள பணம், சொத்து சம்பந்தமான ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் தங்கியுள்ள அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 2 வீடுகள், மகேந்திரனின் மாமனார் வீடு என ஒரே நேரத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகள் மத்தியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...