மாவட்ட செய்திகள்

ஈரோடு சூளையில் ரூ.1¾ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கலெக்டர் ஆய்வு

ஈரோடு சூளையில் ரூ.1¾ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வு

ஈரோடு,

ஈரோடு அருகே சூளையில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையையொட்டி, ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் சாயக்கழிவுநீரும், சாக்கடை கழிவுநீரும் சுத்தம் செய்யப்பட்டு குடிக்க உகந்த தண்ணீராக மாற்றப்படவுள்ளது. பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக இதற்கான எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகிறது.

இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் சார்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி, திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த பிறகு எந்தெந்த இடங்களில் அமைப்பது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.பிரபாகர், தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மணிமாறன், சரவணகுமார், மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார், பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி, ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.