பொள்ளாச்சி
ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி வீரர்களுக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கபடி போட்டி
ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான கபடி போட்டிகள் கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் மணிப்பூர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, சண்டிகர், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில் இறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த போட்டியில் 28-க்கு 21 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.
உற்சாக வரவேற்பு
இதை தொடர்ந்து தமிழக அணிக்கு கோப்பை மற்றும் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த அணியில் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 9 பேர் இடம்பெற்று விளையாடினர். மேலும் புதுக்கோட்டை, மதுரையை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய அணியினர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பயிற்சியாளர் விக்னேஷ் உடன் இருந்தார்.
இதை தொடர்ந்து சேத்துமடைக்கு செல்லும் வழியில் ஆனைமலை முக்கோணத்தில் கபடி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.