மாவட்ட செய்திகள்

குளிர் காய்ந்த போது காவலாளி மூச்சுத்திணறி சாவு

ஊட்டி அருகே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த போது காவலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). கேத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58). இவர்கள் 2 பேரும் கேத்தியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தனர். தினமும் ரோந்து பணியில் ஈடுபடும் கேத்தி போலீசார் கல்லூரியில் உள்ள சோதனை புத்தகத்தில் கையெழுத்து போடுவதற்காக காவலாளிகள் தங்கி இருந்த அறைக்கு செல்வது வழக்கம்.

இதனிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கல்லூரியில் காவலாளிகள் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அறை பூட்டப்பட்டு இருந்ததால், போலீசார் கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காவலாளிகள் சண்முகம், கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றொரு காவலாளி கிருஷ்ணனுக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளிகள் சண்முகம், கிருஷ்ணன் ஆகியோர் கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் உள்ள அறைக்குள் சீகிரி அடுப்பு மூலம் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் அறையை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

அந்த அறைக்குள் காற்று போக வழி இல்லை. இதனால் சீகிரி அடுப்பில் இருந்து வெளியேறிய புகை அறை முழுவதும் பரவி இருந்தது. அதன் காரணமாக அங்கு தூங்கி கொண்டிருந்த காவலாளிகள் கிருஷ்ணன், சண்முகம் ஆகிய இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதில் சண்முகம் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த சண்முகத்துக்கு பாக்கியலட்சுமி (43) என்ற மனைவியும், அருண் என்ற மகனும் உள்ளார். தற்போது அருண் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சண்முகம் அந்த தனியார் கல்லூரியில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணனுக்கு பார்வதி (50) என்ற மனைவி உள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை