ஈத்தாமொழி,
நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே பொழிக்கரை கடற்கரை சாலையில் நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு ஓடியது. இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது தூரம் ஓடிய நாய், அந்த உடலை சாலையில் போட்டு விட்டு ஓடியது.
இதுபற்றி ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தையின் உடலை பார்வையிட்டனர்.
போலீஸ் விசாரணை
மேலும் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி சீதா கொடுத்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான விவரங்கள் வருமாறு:-
இறந்த குழந்தை பிறந்து 3 மாதங்கள் இருக்கும். குழந்தை கடலில் வீசப்பட்டுள்ளது. அதனால்தான் அழுகி சிதைந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. அதனை நாய் கவ்வியபடி தூக்கி வந்துள்ளது. அங்குள்ளவர்கள் சத்தம் போடவே குழந்தையின் உடலை சாலையில் போட்டு விட்டு நாய் ஓடி விட்டது. குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அது ஆணா? பெண்ணா? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.
பரபரப்பு
இருந்தாலும் குழந்தையை கடலில் வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்றும், அதனால் குழந்தையை கடலில் வீசி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது. குழந்தையின் உடலை நாய் கவ்வி வந்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.