கூடலூர்,
கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது முதுமலையில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் முதுமலை வனப்பகுதி எல்லையையொட்டி உள்ள கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்தமான பலாப்பழ சீசன் களை கட்டி உள்ளது. இதனால் பலாப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
சாலையோரம் விற்கப்படும் பலாப்பழங்கள்
கூடலூர்- முதுமலை புலிகள் காப்பக நுழைவு வாயிலில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இரவில் வனத்தில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல கோக்கால் மலைப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் மேல்கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப் உள்ளிட்ட பகுதியில் உள்ள பலா மரங்களை தேடி தினமும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் பீதியுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
இதனிடையே கூடலூர் மார்த்தோமா நகர் முதல் மாக்கமூலா, தொரப்பள்ளி வரை சாலையோரம் பலாப்பழங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் விற்கப்படு கிறது. விளை பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஒன்றாக இருந்தாலும், பலாப்பழ கழிவுகள் திறந்த வெளி மற்றும் குப்பை தொட்டிகளில் வீசப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் பலாப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு ஊருக்குள் வருகின்றன.
விற்க தடை
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பலாப்பழம். இதனால் அதன் வாசனைக்கு காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றன. மேலும் சாலையோரம் விற்கப்படும் பலாப்பழங்களை ருசிக்கவும் வருகின்றன. எனவே சாலையோரம் பலாப்பழங்களை அடுக்கி வைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் தங்கள் பிழைப்புக்காக பழங்களை விற்பனை செய்வதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் பலாப்பழ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.