கூடலூர்
கூடலூர் பகுதியில் கோடை வறட்சி தொடங்கி உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் காட்டு யானைகள் விவசாய பயிர்களை தேடி கூடலூர், ஓவேலி, தேவாலா பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதுடன் வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி மூலக்காடு அரசுப் பள்ளியில் 150 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் இதுவரை 3 முறை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் காட்டு யானைகள் இந்த அரசு பள்ளிக்கூட வளாகத்துக்குள் புகுந்தன. பின்னர் அவைகள், பள்ளியின் கதவு, ஜன்னல் மற்றும் சுவர்களை உடைத்து சூறையாடின. தொடர்ந்து சமையல் அறையில் இருந்த பொருட்களை உடைத்து நாசம் செய்தன.
இதன் அருகில் வீடுகள் இருந்தாலும் இரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. அதிகாலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனத்துக்குள் சென்றது.
அதன் பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஆசிரியர்கள் நேரில் வந்து சேதமடைந்த பள்ளியை பார்வையிட்டனர். இந்த பள்ளியை 4-வது முறையாக காட்டு யானைகள் சேதப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பாராவில் இருந்து செம்ப கொல்லிக்கு செல்லும் சாலையில் ஆதிவாசி தம்பதியினர் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த காட்டுயானை திடீரென்று அவர்களை துரத்தியது. உடனே அவர்கள் தப்பி ஓடியதால் உயிர் தப்பினர்.