பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் உள்ளன. இதற்கிடையில் புலிகள் காப்பக கள இயக்குனர் தெபாசிஸ் ஜனா உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் மேற்பார்வையில் புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியாறு வனப்பகுதியில் உதவி வனபாதுகாவலர் செல்வம் கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார். கணக்கெடுப்பு பணியின் போது வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல், தடயங்கள் ஆகியவற்றை பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. அப்போது வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்.
மழையால் பாதிப்பு
மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் சின்னக்கல்லார் பீட் சிங்கோனா சரக வனப்பகுதியில் விலங்கியளாளர் கார்த்திக் முன்னிலையில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரகர் செந்தில்குமார் அய்யர்பாடி வன சரக வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியை தொடங்கிவைத்தார்.
கணக்கெடுக்கும் பணியில் மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளை நேரடியாக பார்த்தும், அவைகளின் கால்தடங்கள், எச்சங்கள் ஆகியவை பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் மழை பெய்ததால் கால்தடங்களை பதிவு செய்து கணக்கெடுக்கும் பணி பாதிக்கப்பட்டது.
உலாந்தி
உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் வனப்பகுதியில் வனச்சரகர் சக்திவேல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். வனச்சரகத்திற்கு உட்பட்ட கோழிக்கமுத்தி, வரகளியாறு, கூமாட்டி, எருமைப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 6 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து உதவி வனபாதுகாவலர் செல்வம் கூறியதாவது:-
தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4 வனச்சரக பகுதிகளில் 62 நேர்கோட்டு பாதைகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. நேர்கோட்டு பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல், தடயங்கள் மற்றும் நேரில் பார்த்தும் கணக்கெடுக்கப்படுகிறது. முதல் 3 நாட்கள் மாமிச உண்ணிகளும், அதை தொடர்ந்து தாவர உண்ணிகள் கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுப்பு விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்படுகிறது. 25-ந்தேதி கணக்கெடுப்பு பணி நிறைவு பெறுகிறது. வழக்கமாக கணக்கெடுப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர். தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.