செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்து உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி ஆகும்.
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மர்மநபர்கள், அந்த பெண்ணை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு, உடலை இங்கு கொண்டு வந்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் கொலையுண்ட பெண் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் திருநங்கைகள், லாரிகளை வழிமறித்து டிரைவர்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பது வழக்கம். எனவே இறந்து கிடந்தவர் திருநங்கையா?, பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் நவீன்குமார் என்ற வாலிபர், நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்குள் பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்று உள்ள இந்த 2 கொலை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.