பெங்களூரு: பெங்களூரு புலிகேசிநகர் 48-வது வார்டு அம்பேத்கர் நகர் பி மற்றும் சி பிளாக் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை காவிரி தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அந்தப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த 15 நாட்களாக அந்தப்பகுதியில் கொஞ்சம் கூட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் மனு கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பி மற்றும் சி பிளாக் பகுதி மக்கள் காலி குடங்களுடன் அந்தப்பகுதியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த சையது சர்தார் அகமது என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை காவிரி தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. அத்துடன் கடந்த 15 நாட்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் பெரியவர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.