மாவட்ட செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி வெற்றி, புதுவை மக்கள் கொண்டாட்டம்

ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், குரோஷி அணிகள் நேற்று மோதின.

புதுச்சேரி,

ரஷியாவில் நடைபெற்ற 21வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், குரோஷி அணிகள் நேற்று மோதின. புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளதால் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டுகளிக்க புதுவை அரசு சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் உள்ள லே கபே அரசு ஓட்டலில் மாடியில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டது. அதில் இறுதிப்போட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பொதுமக்களுடன் முதல்அமைச்சர் நாராயணசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுவை வளர்ச்சி ஆணையர் அன்பரசு, போலீஸ் ஐ.ஜி.சுரேந்திர சிங் யாதவ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் போட்டியை கண்டுகளித்தனர். முடிவில் பிரான்ஸ் அணி வெற்றியை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் நகரின் பல பகுதியில் பிரான்ஸ் அணி வெற்றியை மக்கள் கொண்டாடினர்.