ஈரோடு,
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று உலக தரம் தினம் கடைபிடிக்கப்பட்டது. தூய்மையான மருத்துவமனையே தரத்தின் முதல் படி, தூய்மை பேணுவோம் சுகாதாரம் காப்போம் என்ற கோஷங்களை முன்வைத்து நேற்று தரம் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உலக தரம் தின உறுதிமொழியை கலெக்டர் சி.கதிரவன் வாசிக்க, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் திரும்ப கூறி உறுதி மொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, ஒளிரும் ஈரோடு அமைப்பு, ஜேசீஸ் ஈரோடு கேலக்சி, ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.