தஞ்சாவூர்,
இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதில் வீணாக கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த வழியில் தான் எங்கள் இயக்கம் செயல்படுகிறது. எங்கள் இயக்கம் சார்பில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை ஒன்றுபடுத்தி 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் விதை கிராமங்களை உருவாக்கி விதை பந்துகளை தூவி உள்ளோம். காடுகளின் பரப்பளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
சமுதாயத்தை குறைகூறக்கூடாது. அதில் உள்ள தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். அதற்காக இளைஞர்களை நேர்வழியில் கொண்டு செல்ல பாடுபடுகிறோம். இளைஞர்களை நேர்மையாக மாற்றினால் நல்ல சமுதாயம் உருவாகும். அதற்காக பாடுபட்டு வருகிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைமை பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டுக்கும், அரசுக்கும் வழங்கிவிட்டேன். இனி நீதிமன்றம், அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் தஞ்சையில் மக்கள்பாதையின் சார்பில் நடந்த நேர்மையின் பாதையில் இளைஞர்களே ஒன்றுகூடுவோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.