புதுடெல்லி,
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும் ஆகஸ்டு 7-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சந்தனகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான உரிய அனுமதி கிடைக்கும் வரை, சாலை அமைப்பது தொடர்பான எந்த ஒரு கட்டுமான பணியையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார். அத்துடன் இதுபோன்று பல்வேறு அனுமதி பெறுவதற்கு நிலங்களை கையகப்படுத்துவது அவசியம் என்றும், எனவே, நிலங்களை கையகப்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க மறுத்ததோடு, மனுதாரர்களாக இருந்த 85-க்கும் மேற்பட்ட அனைத்து மனுதாரர்களின் பெயர்களோடு வழக்கு விவரங்களை வருகிற 16-ந் தேதிக்குள் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் இறுதி விசாரணைக்காக வருகிற 22-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.