சிதம்பரம்,
சிதம்பரம் வருவாய்த்துறை சார்பில் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கான நல்லுறவு கூட்டு விழா மேலவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தாசில்தார் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சப்-கலெக்டர் விசுமகாஜன் கலந்து கொண்டு பழங்குடி ஆதிவாசி மக்கள் 163 பேருக்கு சாதி சான்றிதழ்களும், 88 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 18 பேருக்கு நலவாரிய அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் சர்ப்பம் இருளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், காட்டுநாயக்கர் சங்கம் செல்வகுமார் மற்றும் வருவாய் அலுவலர்கள் மற்றும் பழங்குடி ஆதிவாசி மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆதிவாசி கூட்டமைப்பு மாவட்ட தலைவர் குமரன் நன்றி கூறினார்.