செய்திகள்

தஞ்சையில் சின்னவெங்காயம், பல்லாரி கிலோ ரூ.70-க்கு விற்பனை

தஞ்சையில் சின்னவெங்காயம், பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கொடைக்கானல், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஓசூர், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

இதே போல் பல்லாரி வெங்காயம் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மராட்டிய மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். முன்பு இந்த பகுதிகளில் இருந்து 4 லாரிகளில் பல்லாரி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.. ஆனால் அங்கு சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு உற்பத்தி வெகுவாக குறைந்தது.

விலை உயர்வு

இதனால் அங்கிருந்து பல்லாரி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினமும் 1 லாரியில் தான் பல்லாரி விற்பனைக்கு வருகிறது.. இதனால் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரி கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்ன வெங்காயம் வரத்தும் குறைவாக உள்ளதால் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிலோரூ.70-க்கு விற்பனை

இந்தநிலையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே நேற்று மினி ஆட்டோவில் சின்னவெங்காயம், பல்லாரி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. 1.5 கிலோவாக வாங்கினால் சின்ன வெங்காயம், பல்லாரி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற ஆண்களும்-பெண்களும் போட்டி போட்டு கொண்டு கிலோ கணக்கில் வெங்காயத்தை வாங்கி சென்றனர். மேலும் அந்த பகுதியில் ஓட்டல்கள் வைத்திருப்பவர்களும் வாங்கி சென்றனர்.

இது குறித்து வெங்காயம் வாங்கியவர்கள் கூறுகையில், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு விற்கப்படும் வெங்காயம் சிறிய ரகமாக இருந்தாலும் பரவாயில்லை, கொஞ்சம் மழையில் நனைந்து இருந்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் வாங்கி செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை