அகமதாபாத்,
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அகமதாபாத்தில் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். ஏபிவிபி அமைப்பினர் அலுவலகம் அருகே திரண்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது ஏபிவிபியை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பினருக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், 10 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து, தடியடி நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.