அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், வாளரமாணிக்கம் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான தணிக்கை குறிப்புகளை சமர்ப்பித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை கோரிக்கையான சாலைவசதி, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வீடற்ற ஏழைகளுக்கு பட்டா இடம் இருப்பின் அனைவருக்கும் பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அடியோடு அகற்றப்படும். எனவே தமிழக அரசின் இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகண்ணன், மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, ரவி, இயற்கை சின்னையாநடேசன், ஊராட்சி செயலாளர் விஜயகுமார், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கடையக்குடி கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பற்றாளர் சுமதி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்தல் மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்தல். கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமாநாட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு தலைமையிலும், திருவேங்கைவாசலில் வட்டாரவளர்ச்சி அலுவலர் சங்கர் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல அம்மாசத்திரம், சத்தியமங்கலம், மதியநல்லூர், நார்த்தாமலை, முக்கண்ணாமலைப்பட்டி, இடையப்பட்டி, புதூர், ஈஸ்வரன்கோவில், ஆரியூர், வெள்ளனூர், இருந்திராப்பட்டி, உள்ளிட்ட 43 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 36 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேஷ்பிரபு, மகாலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல துணை ஆணையர் பாலகுரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கிராம இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல கந்தர்வகோட்டை அருகே உள்ள மணவிடுதி ஊராட்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முடிவில் ஊராட்சி செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.
விராலிமலை கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குன்னத்தூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு விராலிமலை வட்டார கால்நடை மருத்துவர் கணபதி பிரசாத் தலைமை தாங்கி பேசினார். இதில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், விராலிமலை ஒன்றிய அலுவலர் சண்முகசுந்தரம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல விராலிமலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாத்தூர், மண்டையூர், குமாரமங்கலம், பாலாண்டாம்பட்டி, கத்தலூர், வேலூர், சூரியூர், ஆவூர், பேராம்பூர், களமாவூர், பாக்குடி, விளாப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.