வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது நாரலப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஏக்கல்நத்தம் மலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் மொத்தம் 463 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவர் கூட வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.
இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அங்கு சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தருவதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இதனால் அந்த கிராம மக்கள் வாக்களித்தனர். ஆனால் வனத்துறை சாலை அமைக்க அனுமதி அளிக்காததால் இதுவரை அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் இந்த முறையும் தாங்கள் வாக்களிக்க போவதில்லை என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையில் அந்த கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து நேற்று முன்தினம் 10 பேர் கொண்ட தேர்தல் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மலை கிராமத்திற்கு நடந்தே கொண்டு சென்றனர். ஆனாலும் தாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். நேற்று காலை 5.30 மணி அளவில் வனச்சரகர் நாகேஷ் தலைமையில் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கிராம மக்கள் வாக்களிக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கிராம மக்களிடம் பேசினார்கள். ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் நேற்று மாலை 6 மணி வரையில் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் தேர்தல் அலுவலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல முறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பிரசவத்திற்காக தூளியில் கொண்டு செல்லும் போது பெண்கள் பலர் இறந்துள்ளனர். மேலும் சரியான நேரத்திற்கு சிகிச்சை கிடைக்காமல் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
காட்டு பாதை வழியாக செல்ல வேண்டி இருப்பதால் இங்கிருந்து கல்லூரிக்கு யாரும் செல்வதில்லை. எனவே சாலை வசதி செய்து தரும் வரை தேர்தலில் வாக்களிக்க போவதில்லை. அரசு கொடுத்த அனைத்து அடையாள சான்றுகளையும் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம். சாலை அமைக்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.